Monday, April 30, 2012

மே தினம்

எங்க ஊர் கோயமுத்தூருங்க......,  அன்று...!
இதப் பாருங்க இதழ் இதழா விரிஞ்சு., மரம் பூரா வானம் பார்த்து மலர்ந்து., செக்கசெவேல்ன்னு  பூத்துப் புன்னகைக்கும் பருவத்தை மே மாதத்துடன் உறவிட்டு ,மே மாதத்தில் மே ப்ளவர்கள் பூத்து விட்டன என்று காலம் காலமாக சொல்வார்கள்.

Inline image 1
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்....என்று தொழிலாளர்த் தோழர்கள் ஒன்றுகூடி செங்கொடி ஏந்தி இரத்தினசபாபதிபுரம் பரியல்
மைதானத்தில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய சாலைகளில் பயணித்து, வ.ஊ.சிதம்பரம் பூங்கா திடலில் சங்கமித்து, குதூகலித்து,கூட்டம் நடத்தி ,கோஷ முழக்கம் இட்டு உற்ச்சாகத்துடன் வீடு திரும்புவார்கள்.

மாலை  நான்கு மணிக்குப் புறப்படும் எனில்,மணிக்கணக்கில் அவ்வளவு கச்சிதமாக ஊர்வலம் புறப்படும்.


இன்று......!

நகரெங்கும்  சாலை விரிவாக்கத்திற்காகவும் ,காங்கிரீட் கட்டிடங்கள் முளைப்பதற்காகவும்.,எண்ணிக்கையிலும் அடர்த்தியிலும் குல்மொஹர் என்னும் மேப்ளவர் மரங்கள் மிக மிகக் குறைந்துவிட்டன.

Inline image 2
பஞ்சாலைத்தொழிலின் நசிவும் , பொருள் முதல் வாதத்தின் பிடிப்பும் , நுகர்வோர் கலாச்சாரத்தின் வளர்ச்சியிலும் கட்டுண்டு தொழிலாளர் வர்க்கம் எண்ணிக்கையிலும் , அடர்த்தியிலும் குறைந்து விட்டதை உணர்ந்தேன்.


என் சிறு வயதில் பள்ளி விட்டு வீடு நோக்கி தெப்பக்குள மைதானத்தை கடந்து செல்லும் போது அலறும் செங்கொடிப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே செல்வேன். முன் இரவுக் கூட்டத்தில் சிவப்பு ஈரலைத்துண்டுடன் காசுக்கு கையேந்தி வருவதையும் கண்டிருக்கிறேன் .மைதானத்தை சுற்றி இருக்கும் தெருக்களிலெல்லாம் மிதி வண்டிகள் அணி வகுத்திருக்கும்.

சித்தாந்தச் சிற்றிதழ்களை சுற்றி சிவப்புச் சிந்தனையாளர்கள் மொய்த்திருப்பர்.

விடியலில் ஆங்காங்கே சிதறாமல் குவிந்திருக்கும்  நிலக்கடலைத் தொல்லிகள் சொல்லும் நேற்றைய இரவின் கூட்டத்தின் அடர்த்தியை....!

சித்தாந்தம் சிதறி விடவில்லை........! சித்தாந்தவாதிகள்....................?

எல்லோரும் எல்லாமும்  பெற வேண்டும்

இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

கானல் நீர்......!

உங்களுக்கு தெரியுமா...........!



மே தினம் .....! 1923ம் ஆண்டு முதன் முதலாக சென்னை கடற்கரையில் மே தினம் கொண்டாடி இந்திய வரலாற் றில் என் றும் அழியாத புகழ் முத்திரையைப் பதித்தவர் பொதுவுடமை வாதியும்.,சீர்திருத்தவாதியுமான மா.சிங்காரவேலர்.

Tuesday, April 24, 2012

எங்க ஊர் கோயமுத்தூருங்க....




                         எங்க ஊர்
       கோயமுத்தூருங்க....

மின்னல் அடிச்சு 

இடி இடிச்சு

கடும் சூறாவளியோட நேத்து பேஞ்ச மழையில்...

முறிந்தது போக, நின்றாடும் மரங்கள், 

மந்தாரமான விடியலைக் கண்டு, பசும் புன்னகை பூத்த்து..


இன்று....


நகரத்தின் காவல் தெய்வமான தண்டுமாரியம்மன் கோவிலில்

சித்திரைத் திருநாளின் ஒன்பதாம் நாள்.


அக்கினிப் பூச்சட்டி கையில் ஏந்தி, அலங்காரப் பால்குடம் 

தலையில் ஏந்தி, கோணியம்மன் கோயிலிருந்து 

தண்டுமாரியம்மன் கோயிலை நோக்கி, அம்மனை அழைத்துக் 

கொண்டு திருவீதி உலா. 


பக்தியெனும் சொல் கொண்டு ஒற்றைத் திருநாளில் 

எத்தனை  எத்தனை சந்தோஷம் அவர்களிடம்.

தனை மறந்து தன்னில் இருந்து வெளிப்பட்டு தாயே 

தண்டுமாரியம்மா...! எனும் மையப்புள்ளியைக் கூர்ந்து 

நோக்கி, ஆர்ப்பரிக்கும் ஆட்டத்துடனும், உருமி மேளம் 

இசைக்க, சந்தத்துடன் அமைந்த பாட்டுகளுடனும், 


வெறுமையுடனும், வேண்டுதல்களுடனும்,அழுகையுடனும், 

சந்தோஷங்களுடனும், ப்ரியங்களுடனும், திருவீதி உலா 

சென்றார்கள். 



புன்னகைத்தேன்....

அவர்களது 

ஆர்வத்தைப் பார்த்து....


கை கூப்பினேன் 

அவர்களது 

பக்தியைப் பார்த்து....



சந்தோஷமாய் 

தண்டுமாரியம்மன்........


  


    

Monday, April 23, 2012

புன்னகைப்பீர்களா.... யோசிப்பீர்களா.....



சற்றேறக்குறைய முப்பத்துஏழு டிகிரி வெயிலின் வெக்கை சற்றும் குறையாமல் இருந்த ஞாயிறின் மாலைப்பொழுதில் கிக்கானி பள்ளி வளாகக் கலைஅரஙத்தில், மாலை6.30 மணிக்கு சீர்காழி சிவசிதம்பரத்தின் தமிழ் இசைக் கச்சேரி துவங்கியது.
பிசிறுதட்டிய தமிழ்க்குரலுடன் கணபதியை மிரட்டி அழைத்தார். தடிமனானகுரலில் மிரட்டிஅழைக்கப்பட்ட கணபதி கடைசி வரிசையில் சென்று அமர்ந்து அருள் பாலித்தார்.

குழைவு, நெளிவு எதுவுமின்றி உண்டிவில்லில் வைத்து நேராக குறி பார்த்து எறியும் பிரயோகத்தில்,என்  அப்பன் சிவனை அழைத்து, “வேண்டத்தக்கது அறிவோய் நீ..!   வேண்ட,முழுவதும் தருவோய்  நீ.....!.எனும் திருவாசகப் பாடலை எறிந்தார். எறியும் போது வெட்டிய கழுத்தின் வீச்சு பார்வையாளர்களின் மத்தியில் ஒரு பதைபதைப்பை ஏற்படுத்துகிறது.

ஆனாலும் வார்த்தைகளின் தடிமனான குரல் பிரயோகத்தில் ஒரு கம்பீரம் இருக்கத்தான் செய்கிறது.

ஒரு தம்புரா..,ஒரு வயலின்..,ஒரு மிருதங்கம்..., ஒரு கஞ்சீரா...ஒரு மோர்சிங், அப்புறம்.....ஒரே...ஒரு கடம்....இசைக் கருவிகளின் கூட்டமைப்பு சிவசிதம்பரத்தின் வாய் பாட்டுக்கு மிகவும் துணை செய்து , உயர்வு செய்தது. எதுவும் சோடை போகவில்லை,...அதிலும் வயலினும் மிருதங்கமும் தமது பங்கை மிகச்சிறப்பாகச்செய்தது.  

ராக ஆலாபனைகளை அதிகமாகத் தொடாமல் , கை தட்டுதல் வாங்கும் ....

சின்னஞ்சிறு பெண் போலே..,சிற்றாடை உடை உடுத்தி.....,
மதுரை அரசாளும் மீனாட்சி...மாநகர் காஞ்சியிலே காமாட்சி....,
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா...

மரணத்தை எண்ணி கலங்கும் விஜயா.. போன்ற சீர்காழி கோவிந்தராஜனின் பிரபல திரை இசைப்பாடல்களைத்தனக்கே உரித்தான தடிமனான குரலில் பாடி கைதட்டு வாங்கினார்.
அவ்வப்போது ஒன்று இரண்டு பக்திப்பாடல்கள்.
ஏனோ தெரியவில்லை பழனி மலைக்குப் பின்னாடியிருந்தும் , திருச்செந்தூரின் கடற்கரை மணலிலிருந்தும் சீர்காழி கோவிந்தராஜன் நம்மை பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்விலிருந்து  மீளமுடியவில்லை.

தமிழிசையின் இரசிகர்கள் அனைவருக்குமே குறைந்த பட்ச வயது ஐம்பது. 

அறுபது எழுபதுகளில் நிறைய பேர், எண்பதுகளில் பலர்.
பெரும்பாலானோர் திருநீற்று பட்டை இட்டு , சைவத்திருமுறை ஓதும் வேடத்தில் , சிவபெருமானையே கக்கத்தில் இடுக்கிக் கொண்டு வந்து இருந்தனர். பழம் பெருமை பேசி, உழைப்பின் பிடியில் ஆழ்ந்து , முகத்தில்
பொலிவு இழந்து ,இறுகிய முகத்துடன் வந்து அமர்ந்திருந்தனர். ரசித்தனர், புன்னகைக்க முயற்சித்தனர் ,கை தட்டினர் , கைகளாலும் ,விரல்களாலும் தாளம் போடத்தெரியாவிட்டலும்.... உச்சஸ்தாயில் சென்று முடிந்த தனி ஆவர்த்தனத்திற்க்கு ஆர்ப்பரித்துக் கை தட்டினர். 

அதேபோல் ஒவ்வொருபாடல் முடிவிலும் கைதட்டி தத்தம் சந்தோஸங்களை பகிர்ந்து கொண்டார்கள் .
நான்குபேர் அரங்கத்திலிருந்து வெக்கை மற்றும் புழுக்கம் காரணமாக வெளியே சென்றால் , ஐந்து பேர் தமிழிசையின் ஆர்வம் காரணமாக இருக்கை தேடி அரங்கத்தினுள்ளே வருகிறார்கள்.

ஆனால்...... 

எங்கு தேடியும் வைர மூக்குத்தியோ ,பேசரியோ புளு ஜாகரில் காணக்கிடைக்கவில்லை.....! வாழ்க தமிழ் இசை....! வளர்க தமிழிசை ஆர்வம்.......!