Thursday, July 26, 2012

வசந்த பஞ்சமி இசை விழா


வசந்த   பஞ்சமி  இசை  விழா............ காட்சி  ஒன்று....
”..............T.M.கிருஷ்ணாவின்  கச்சேரி  காலை  6.45 மணிக்கு......ராம் நகர்  ராமர் கோயில்ல....  நீங்களும்  வர்ரீங்க.....” ன்னு எனை  இழுத்துச்  சென்றார்.........எங்க  வீட்டு அம்மிணி.









  
"ராம்நகர்  ராமர்கோயில்" கோயம்புத்தூர்.......





மஞ்சள்  பூ  மாலையில்  சீதாராமனையும்  லட்சுமணனையும்.,  தரிசித்துவிட்டு.....அரங்கினுள்   நுழையும்  போது.,

கீர்த்தனையை., சிறிய  ஆலாபனையோடு  முடித்துவிட்டு  கை  தட்டல்  வாங்கிக்கொண்டிருந்தார் T.M..கிருஷ்ணா...!



அரங்கம்  நிறைந்திருந்தது...........கெளரவங்களால்.

”இது..நானாக்கும்.,அது  நீயாக்கும்.,........இது  நானே  நானாக்கும்......அது  நீயே  நீயாக்கும்...”என புறக் காரண  காரியங்களை நிரப்பிக்கொண்டு.  .... அரங்கம் நிறைந்திருந்தது.


அங்கொன்றும்    இங்கொன்றுமான   அமெரிக்கன்  டைமெண்ட்கள்  மத்தியில்,.  நிறைய   வைரக்கம்மல்கள்.,  வைரமூக்குத்திகள்  பொங்க.... முதிர்  மனைவிகள்.   

 இளம்  மனைவிகள்  மத்தியில்  ஒற்றை வட கல்  அட்டிகை.  

முதிர்., முதிர்  பாட்டிகளிடத்தில் ....வலுக்கட்டாயமாக  புளு  ஜாகரில்  தோடும்., மூக்குத்தியும்  ஜொலித்தன.


மாநிறப்   பெண்கள்   மத்தியில்   வெண்மையின்   வெளிச்சம்...

அதுவும்   எப்படி.?   வெண்மையில்  இத்தனை   நிறங்களா...!  எனக்   கேள்வி   கேட்கும்   வகையில்....

பசு  வெண்ணெய்யின்   வெண்மை. எருமை  வெண்ணெய்யின்   வெண்மை. ரகத்திற்கு   ஒன்றாக  ஒரு   நாள்  புளித்த.,  இரு  நாள்   புளித்த   , மூன்று   நாள்  புளித்த   வெண்ணெய்யில்   மஞ்சள்  மலர்ந்திருக்குமே........  அப்படியான   மஞ்சள்  வெண்மையிலும்   பெண்கள்.



கூந்தல்பெரும்பாலும்   குறைந்து   விட ..., புடவையில்   படோடோபம்   மிளிர்ந்தது. 

புன்னகைக்குப்   புன்னகை.,  புன்   சிரிப்புக்குப்   புன்சிரிப்பு.,  சிரிப்புக்குச்  சிரிப்பு., கண்  அசைவு   அங்கிகாரத்துக்கு..அங்கிகாரம்.,

.....எல்லாவற்றிலும்   பட்டுத்தெரித்தாற்   போன்ற   அதிர்வுகள்   மிளிர்ந்தது.......அகங்கார   அழகியலாக.......!



பதவி  நிறைவு   பெற்று   வந்த   பெரும்பான்மை   ஆண்கள்   மத்தியில்   அதே   கம்பீரம்..

 மருத்துவர்கள்., ஆடிட்டர்கள்., மற்றும்  ஒன்றிரண்டு வியாபார   உலகில்   கோலோச்சியவர்கள்........,  தத்தம்   மனைவியர்களுக்கு  அருகே   தேமே  என்று அமர்ந்திருந்தார்கள்



”நான்  I.T. Coridor  ஆக்கும்”  என  சொல்லாமல்  சொல்லிய  இளம் வட்டங்கள்., 

தம்   இளம்    மனைவியர்   அரங்கத்தின்   உள்ளே இருக்க....  ஓர்  இடத்தில்  நிற்க   முடியாமல் 

கைத்தொலைபேசியுடன்   வராந்தாவின்  இரு  முனைக்கும்  அலையும்  MBA.,க்களும்  I.T., க்களும்   பரபரப்பை   முகத்தில்  மட்டுமல்ல ...  உடல்   அசைவு  மொழிகளிலும்  காட்டினார்கள்....



தமிழகத்தில்  பிறந்து.,   வளர்ந்து.,  அமெரிக்காவில்   தன்னை    நிலை   நிறுத்திக்   கொண்டு.,   விடுமுறைக்காக   கோவைக்கு  வந்த  உலக  பிரகஸ்பதிகள்   இளம்  தொப்பைகளுடன்..., 

தொப்பைகளுக்கு   மேலே   ஊஞ்சலாடும்   நீண்ட   கேமிராக்களுடன்  
தொப்பை  போட்டோகிராபராக   இடமிருந்து   வலம்   வந்தனர்.....


மேடையிலே   சுருதிப்   பெட்டியுடன்  தம்புரா.,   மிருதங்கம்.,  வயலின்.,  வீற்றிருந்தது....   அதன்   ஆகிருதியில்   கடமும் .,  கடம்  வாசிப்பவரும்   காணாமல்   போயிருந்தார்கள்  

இவர்களுக்கு   மத்தியில்   T.M.கிருஷ்ணா   மத்தியமான   இளமையைத்   தாங்கிக்கொண்டிருந்தார் ...





நவநாகரீகத்தின்   அடையாளமாக  ”ஜீன்ஸ்   பேண்ட்”  பெண் ;  காட்டன்  மேலங்கி ;   குறுகலான   முடி  அலங்காரம்  ; அழகியலின்  முத்தாய்ப்பாய்   துளிப்   பொட்டு ;   கையில்   செல்போன்   ;  கால்  மேல்   கால்  போட்டு   அமர்ந்திருந்தாலும்    அந்த   பெண்ணின்   முகத்தில்  சாந்தம்    தவழும்   புன்னகை...


"எனக்கு   வெஜிடபிள் பன்னீர்  பிஸா   போதும் ;  தயிர்சாதம்   ஒரு   கரண்டி   போதும் ;  இஞ்சிப் புளி  ஒரு  துளி போதும் ; T.M. கிருஷ்ணாவின்   இந்த   சாகித்திய  சங்கீதம்   போதும்....." என்று   விரும்பியதைத்   தேர்ந்தெடுத்து ., போதும்   என்ற   அளவில்    நிறைவைத்தறும்   முகம்.


பேக்கு   மாதிரி   மூலையில்   உட்கார   வைத்துவிட்டார்கள்.....வாதாபி   கணபதியை...! எத்தனை   தடவை... எல்லா கச்சேரிகளிலும் கேட்டாச்சு.

 ”மற்றும்   ஒரு    நிகழ்வு”   எனும்   உணர்வில்   சோபையின்றி    கைதட்டல்.


சூர்யதாஸர்-பார்வையற்றவர்   இயற்றிய   கீர்த்தனையை 
T.M. கிருஷ்ணா   ஆரம்பிக்க...... கூட்டம்   செவிமடுக்க....ஸ்வர   ஆலாபனையை   சற்று   எறக்குறைய   ஆறு   நிமிடங்கள்   நடத்த.,
தொடர்ந்து   வயலினுக்கும்  ஐந்து   நிமிடங்கள்  தந்துவிட...... 
கீர்த்தனை   முடிவில்   சஞ்சாரத்தில்   சிறிதான  ஆர்ப்பரிப்பு....!


அது   முடிந்து   “ஏ...கோபாலா.....ஏ.... கோவிந்தா...” எனக்   கூப்பிடும்போது...நேரம்   சரியாக  காலை  எட்டு  மணி..
கை   தட்டலுடன்   பல   ஜனங்கள்., காலை   உணவிற்கும் ., பிரெஷர்  மற்றும்  சர்க்கரை  வியாதி  மாத்திரைகளுக்கும்..,  

”கிளினிக்”   திறக்கப்போகும்  அவசரத்துக்கும்..,  ”புருஷன்  போனால்  பொண்டாட்டியும்   போகணும் “ என்ற  கட்டுப்  பாட்டுக்கும்  
ஏற்ப  “சட்...சட்...”  என்று   கூட்டத்தின்   ஒரு  பகுதியினர்   எழுந்து  புறப்பட்டார்கள்.   


”கண்கள்  இருக்கும்  போதே  சிதம்பரநாதனை   காண  வேண்டாமோ.....!” என்று  T.M.கிருஷ்ணாகேட்டபோது.,
 
பிரபல  மருத்துவரின்  பின்னால்  கிளம்பிச் சென்ற   மருத்துவரின்   மனைவி..... 

அவரும்   மருத்துவர்தான்......

 
  “அட தமிழ்ப் பாட்டு ....  இதைக்  கேட்டுட்டு  வந்துடறனே....” 
என்று   கொஞ்சலுடன் கெஞ்ச ...,  பிரபல  மருத்துவர்   புன்சிரிப்பைக்   கொட்டாமல்  ”சரி” என   வெளியே   நகர்ந்தார்.

கணவர்  வெளியே  செல்வதற்கு  முன்பு.,   கணவருடன்   அமர்ந்திருந்த   மருத்துவ  மனைவி ரசிகத்  தன்மையில்.,அமைதியின்.,  அடக்கத்தின் சொரூபமாக   அமர்ந்திருந்தார்.

”ஆஹா...பேஷ்..பேஷ் ..என்ன   ஒரு  தனி ஆவர்த்தனம்.”தன்  தனிமையில்., அந்த   மருத்துவ  மனைவியின்   ரசிகத்தன்மையில்....எத்தனை  எத்தனை   உற்சாகம்;  உத்வேகம்  ; கூடவே  பாட..., முகம் முழுவதும்.. அபிநயம்  களைகட்ட... விரல்களில்  தாளம்  லயமிட...பரவசத்தை  அள்ளிப்பருகிய   திருப்தி... அவர்  முகத்தில்.பக்கத்தில்   உற்சாகமாய் இரு  தோழியர்  வேறு.

மீண்டும்   திரும்பி  வந்த   பிரபல   மருத்துவர்  “என்  செல்போன்..” என்று  

வினவ., அவரது மருத்துவ  மனைவியின் முகமாற்றம்  அவ்வளவு  அருகில்  அதிர்ச்சி  அடைய  வைத்தது.

பொங்கி  வரும்  பாலில்  ஒரு  டம்ளர் தண்ணீரை  ஒட்டு மொத்தமாக  கொட்டியது  போல ”புஸ்ஸ்”  எனப்போயிற்று.

பிரபல  மருத்துவர்   அரங்கத்தை  விட்டு   மீண்டும்  அகன்ற  போது  மருத்துவ  மனைவி.,

விட்ட  இடத்தில்   இருந்து   பற்றிக்கொண்டார்  தன்  சந்தோஷமான  ரசனையை..!

மூக்கில்  ஒற்றை  வைரக்கல்  மூக்குத்தி   தன் அளவில்  மினுமினுத்துக்கொண்டே  இருந்தது.


....”ஸீ..த்ரூ
”  ஆடையை  பெண்கள்தான்  அணிய வேண்டுமா..?

6.2 உயரத்தில்  ”ஸீ..த்ரூ” ஆடையில்  ஒருவர்  மல்லுவேட்டி மைனர்  கணக்காக., இழுத்துக்கட்டிய  வேட்டியின் மேல்   மிகநீண்ட  வண்ணக்குர்தாவைப்  போட்டுக்கொண்டு.,

இங்கும்  அங்கும் அலைந்து  கொண்டு  இருந்தார்.

பின் தங்கிய  பெருசுகள்   கடைசிவரை  மிகப்  பரிதாபமாக   அமர்ந்திருந்தார்கள்., அவ்வப்போது  தலை ஆட்டியவாறு.

டி.எம். கிருஷ்ணா...  ராகவேந்திரர்  கீர்த்தனையுடன்  தம்  கச்சேரியை  முடித்துக்கொள்ள...

தித்திக்கும்  இனிப்பாக “அக்கார வடிசலையும்”  மிளகுடன்  வெண்பொங்கலையும்  பிரசாதமாக 

வாங்கிக்கொண்டு  வெளியே  வந்தால்...10..,20.,30., லட்சம்  மதிப்புள்ள  கார்களின் ஒட்டுனர்கள்

வெள்ளை  உடையில்  பின்கை கட்டி  வழி  மீது  விழி  வைத்துக்   காத்து  இருந்தனர்  தங்கள் எஜமானருக்காக.வசந்தத்தின்  இசை  இன்பம்  அவர்களது  செவிகளை  எட்டவில்லை.

அவர்களுக்கு  ஒரு எம்.ஜி.ஆர்.படப் பாடலோ.,சிவாஜி படப்பாடலோ
...டி.எம்.எஸ்.,பி.பி.எஸ்.,எஸ். பி.பி...குரலில்  போதும்...
கடைசிக்கு  ஒரு  கொலை வெறி  பாட்டு கூட அவர்களைப் புன்னகைக்க  வைக்கும்.

............இசை  என்பது  எங்கும்  பரவிக்கிடக்கிறது.........











வசந்த   பஞ்சமி  இசை  விழா............ காட்சி  இரண்டு.


மரங்கள்   சூழ்ந்த  வெட்டவெளிப்   பிரதேசத்தில்.., தாவரவியல்   பூங்காவில்  ., வசந்தபஞ்சமியின்  இரண்டாம்  நிகழ்வாக

அருணாசாய்ராமின்   இசைக்கச்சேரி  காலை   பத்து  மணிக்குத்   துவங்கியது.



இங்கும்...ஜனங்கள்.......!

பொருளாதாரத்தின்  சிகரங்களை   எட்டிப்பிடிக்கும்   தூரத்தை   துரத்திக்கொண்டே   இருப்பவர்கள்.

சாகித்தியத்தின்  அடையாளத்தை   ரசித்துக்கொண்டே   கண்ணீர்  விடுபவர்கள்.

பின்  தங்கிப்போன   வயோதிகர்கள்  கைகூப்பிய   நிலையில்  சங்கீதத்தை   ரசிக்க.....,

சங்கீததை  வாசித்தவர்கள்   கூடவே   வசிக்க..., பொருள்   புரிந்தவர்கள்   உருக..,

இசை  புரிந்தவர்கள்   லயிக்க..., சின்னஞ்  சிறுசுகள்   கனவுகளை  கண்களில்   ஏந்த...,

இசையை  விட்டுப்  பிரிந்தவர்கள்., பழம்  நினைவில்  மூழ்க..,

எல்லோரையும்  தன்   குரலில்   அருணாசாய்ராம்   வசீகரிக்க...,

பற்பல   விதமான   ரசனைகள்  பொங்க..,  தாளகதியில்  கட்டுண்டு   இருந்தார்கள்.


வந்தனம்  ரகுநந்தனா.......என   ஆரம்பித்து.......

சதா  சாரங்க  நயனே......என  நயனோவில்   நம்மை   மிதக்கவிட்டு.....

மத்தியமத்திலிருந்து   பஞ்சமத்துக்கு  செல்லும்    உச்சத்தையும்.....,

காந்தாரத்தில்   நின்று   ஆடிய  ஆட்டத்தையும்....,

நிஷாதத்தில்   சொக்கவைத்ததையும்......

தன்  அபிநயத்துடன்   கூடிய  இசையால்    சிறப்பாக   செய்தார்   அருணாசாய்ராம்.

தீர்த்தவிட்டல   அபங்கத்தில் .,  சுற்றிச்சுற்றித்தாக்கும்  இசை இன்பத்தில்....,

பலருக்கு   கண்களில்   கண்ணீர்...!

ஊத்துக்காடு    வேங்கடசுப்பிரமணியர்   பாட்டான   “விஷமக்கார  கண்ணா...” பாட்டு


அனைவரையும்   தள்ளாட  வைத்தது...நிறைந்த  புன்னகையுடன்.    

இடையே..... கணபதி  பாப்பா   மோரியா   ஜோஜோ   தசரத   பாலா.......ராமாவின் 

 ஊஞ்ச்ல்   ஆட்டம்   மிகுந்தகொஞ்சலுடன்   மிளிர்ந்தது.

என்ன  கவிபாடினாலும்   எனும்   விருத்தத்துடன்... 

ஓம் முருகா  உந்தன் உள்ளம்  இரங்கவில்லை  .... எனும்   வேண்டுதலில்

உருகிக்  கிடந்தார்கள்...........ஜனங்கள்..!


நெஞ்சுக்கு   நீதியும் .., தோளுக்கு  வாளும்....என  பாரதியை   துணைக்கு  அழைத்து..,

தாமரை  பூத்த  தடாகமடி  என்  நிரவலில்   நிரவி........

மீனாட்சி  சுந்தரேஸ்வரர்   திருக்கல்யாணத்தில்.... “போஜனம்   செய்யவாருங்கள்”  என  அழைத்து

துக்கடா  இல்லாத  குறையையும்..., தனி   ஆவர்த்தன  நிகழ்வையும்   தவிர்த்து....,

நிறைவாக.......தானே.....  இசை  மேடையையும்  .,  ஜனங்களின்  உள்ளத்தையும் 

 ஆக்கிரமித்துக்  கொண்டார்   அருணாசாய்ராம்    அவர்கள்.


டி. எம். கிருஷ்ணா...ஆகட்டும்...,அருணாசா
ய்ராம்   ஆகட்டும்  ....நேரடிக் கச்சேரிகளில்  ., அவர்களைப்

 பார்த்தவாறு அமர்ந்திருக்கும்   ரசிகர்களை.,  இசை   பயிலாத  ரசிகர்களைக்கூட..,இரு  வழிகளில்  இசைக்குள்

 அழைத்துச்  சென்று  விடுகின்றனர்.

ஒன்று......!


குரலின்   இனிமை., கம்பீரம்., உச்சம்., குழைவு.,...........மற்றும்   சாகித்தியம்.


இரண்டு....!


முக பாவ  கை  அசைவுகள்.




ஆரோகணமும்  அவரோகணமும்.,  ஸ்வர   ஆலாபணையும்.,  ஸ்வர  சஞ்சாரமும்.,  ஷட்ஜமம்  முதல்  நிஷாதம் வரை

இசை  பயிலாதவர்கள்  கூட ., மீண்டும்  மீண்டும் வாய்ப்பை   ஏற்படுத்திக்கொண்டு   கேட்ட   கேள்வி  ஞானத்தில்.,

எங்கு  எப்படி  துவங்கி., எங்கு  உள்  இழுத்து., எங்கு  உயர்த்தி., எங்கு  நின்றபடி  நிரவல்  செய்து .,எங்கு  நம்மை 

மிதக்கவிட்டு.,  எங்கு  நம்மை தவிக்க  விடுகிறார்கள்.........  என  உணர்த்திச்  சென்று  விடுகிறது  அருணாசாய்ராமின் 

முக... பாவ.... கை.... அசைவுகள்


பெண்மை  மிளிரும்  குரலில்  ஆண்மையின்  உச்ச  ஸ்தாயிக்கு  அருகே  வர   அசுர சாதகம்  வேண்டும்.

அருணாசாய்ராமுக்கு  ஓரளவு  கிட்டியிருக்கிறது.


அந்தக்  காலத்தில்......! 

ஸ்வரவரி்சையின்  சஞ்சாரத்தை  இசைக்க   எடுத்துகொண்டால்   அவரவர்  கற்பனை  வளத்தில்  நேரம்  போவதே  தெரியாது.

அந்தக்   காலத்தில்   சுருதியின்  சுத்தம்  பெரும்பாலும்  அஃக்மார்க்காகவே   இருக்கும்.

 

அந்தக்  காலத்தில்.,  தாள  லயம்  என்பது   தனி  ஆவர்த்தனம்   வரை  நூல்  பிடித்தமாதிரி  கூடவே  வரும்.


அந்தக்  காலத்தில்.,  ராகங்களின்  கம்பீரம் கேட்டாலும்  உணர்ந்தாலும்  உள்ளத்தில்  உயர்ந்து   நின்றுக்  கொண்டே  இருக்கும்...


அந்தக்  காலத்தில்.,  ”ரசம்” என்பது  பக்தியிலும்  சரி  சிருங்காரத்திலும்  சரி  கண்களில்  கரகரவென்று  கண்ணீராய்  வெளிப்படும் 

அந்தக்  காலத்திலே   இசையின்  எல்லாவடிவங்களும்  இதயத்தில்  நின்றிருக்கும்   என  எத்தனை  எத்தனையோ 

அந்தக் காலங்கள்......


ஆனால்  இன்று  பருவகாலத்தின்  மாற்றத்தைக்  கொண்டாட.,  பஞ்சமி  திதியில் .,  வஸந்ததை  வரவேற்க்க.,  வித்தியத்தை 

தரும்  சரஸ்வதிதேவியின்  பிறந்தநாளான  இன்று  கோவை  மாநகர  மக்களின்  பலருக்கு  வஸந்த   பஞ்சமித்  திருநாள்  இசை 

விருந்து  கிடைத்தது  .



                                       வானவீதியின்  நீள்வட்டப்  பாதையில்.,   ஈர்ப்பு  எனும்  அச்சில்  ., 
                                      
                                       பூமிப்பந்தின் சுழற்சியில்  பிறந்ததுதான்  பிரபஞ்ச  இசையா....!

                                       அந்த  மெளனத்தின்  சப்தத்தை  உணர்ந்தவர்   யார்....!

                                       “ஓம்” எனும்  பிரணவ  மந்திரத்தின்  ஓசையை  உச்சரிப்பவர்  யார்....!

                                        எது  எதனுடன்  தொடர்பு  கொண்டு  ஏழுஸ்வரங்களை  வரிசைப்  படுத்தியது...!

                                       அதில்  உட்புகுந்து.,  ராகங்களை  அமைத்துக்  கொடுத்து., 

                                       ஜீவிதத்தின்  உன்னதத்துக்கு  இன்னும்  ஒரு  வழி  அமைத்து  கொடுத்த  சக்தி  எது...!



                                                               பூக்கும்  புன்னகைக்கும் 

                                                               மலரும்  மலருக்கும்

                                                               ஒரு மாத்திரை  என

                                                               அளவிட்டவர்  எவர்....?       



Tuesday, July 17, 2012

ஜனங்கள்.......... உழவர் சந்தை..........


கதம்பம் 3 ..........


சுக்கிட்டிக் கீரையும், தண்டுக் கீரையும், பருப்புக் கீரையும்,
உயர் ரகம்நாட்டு ரகம் என்று 
கொத்துமல்லித்தலையும்,  எண்ணெய் பளபளப்பில் கருவேப்பிலையும்,
கொத்து கொத்தாய் சுவை  
மணக்கும் ......புதினா....... இலை வகைகள்   ஒரு  புறம்.





 நாட்டுக் காய்கறிகள்  எனும் தலைப்பில்.........கத்திரிக்காய், வெண்டைக்காய், பீர்க்கங்காய், வாழைக்காய்,
பூசனிக்காய், அரசானிக்காய், முருங்கைக்காய்....என காய்கறி வகைகள் ஒரு புறம்.






தண்டும், முருங்கக்கீரையும், தேங்காயும்.... தனி ஆவர்த்தனமாய், தனியே ஒரு புறம்.




தமிழருக்கு தனி முகம்.. அதுவும் மலைவாழ் தமிழருக்கு தனித்தமிழ் சாம்பல் பூத்து வெளுத்த முகம்...... 
கறுப்பும் வெளுப்பும் என எந்த நிறமானாலும்..........

 
கோசும் ,காலி ப்ளவரும் 
வாசம் வீச.. 

குண்டு குண்டு 
உருளைக்கிழங்கு.. 

தூத்துக்குடிமாவட்டம் 
எட்டையபுரம் தாலுக்கா..,
உருளைக்குடி கிராமத்து ஜனங்களுக்கு , நீலகிரி மலையில் விளைந்த குண்டு குண்டு உருளைக்கிழங்கு எட்டியிருக்குமா..? எனும் சந்தேகம் எனக்குள் புன்னகைத்தது.
ஆமாம்... உருளைக்குடி என்ற பெயர் எப்படி வந்தது...? காரணப்பெயரா...இடுபெயரா....? என்னும் கேள்வியுடன்
திரும்பினால் என்னைக் கவனி என்று பச்சைநிறம் கண்சிமிட்டியது.



 

கொட்டிக் குவிந்து கிடந்தன பீன்ஸும் பட்டாணியும்.

கடித்துச் சுவைத்திட கேரட்......,






 


அங்கும் இங்கும் எங்கும் சுத்தமான சிவப்பில் 
நாட்டுத்தக்காளியும்.., 
ஆப்பிள் தக்காளியும்..., 
அதுவும் இரண்டு ரூபாய் 
வித்தியாசத்தில்...



ஒரே ஒரு இடத்தில் கருணையோடு கருணைக்கிழங்கு.






சிறு குவியலாக பப்பாளிக் காய்களும் ,பழங்களும்..,
 
தாகசாந்தி செய்திட இளநீர்க் கடையும் இருந்தது.











குண்டு மிளகாயும்.., பச்சை மிளகாயும் எனைப் பார்க்க..,
நீட்ட மிளகாய் வருத்து எடுத்து விட்டது வரமிளகாயாக...
அதுவும் மிகுந்த காரத்துடன்.




நம்மூர் பக்கமிருந்து வந்த ,தெரிந்த முகமான கடைக்காரராக இருந்தால் , ஒரே கடையில் பை நிறம்பி சுமை ஏறி விடும்.


தேடித்தேடி, விரும்பி வாங்க வேண்டிய காய்கறிகளுக்காக அங்கும் இங்கும் ஆர்வத்தை சிந்தும் என் மனைவியைப் பார்த்தவாறே ஆங்காங்கே காத்திருந்தேன்.

காம்பை உடைச்சு வெண்டைக்காயைத் தேடாதே...! எனும் சப்தம் ஒரு புறம்....,ஒரு ரூபா கூட கம்மி இல்லை..என்று எறிந்துவிழும் சப்தம் ஒரு புறம்.., மொத்தம் ஒன்பது ரூபா.,
ஆனாலும் கூசாம பத்து ரூபான்னு கேட்பது ஒரு புறம்...!

கண்ணு...! தோட்டத்திலேயே முப்பது ரூபா கண்ணு...இங்க இருபத்துஎட்டு ரூபான்னு முடிவு செஞ்சுட்டாங்க.... என்ன கண்ணு பன்றது “ன்னு.. சிரிச்சுகிட்டே நஷ்டக்கணக்கு சொல்வதும்.., கேட்பதும்.. மற்றும் ஒரு புறம்.

இனிமையான குளிர் நிறைந்த காலை நேரம்..,வெயிலின்
சுரம் இன்னும் ஏறவில்லை. வெளிச்சம் மட்டும் இளம் தென்றலுடன் உடலை வருடியது .

கிராமத்து மனிதர்களே வியாபாரிகளாக மாறிப்போய், காசுபார்க்கும் கனாகாலத்தில், சற்றே எரிச்சல்... அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒலிக்க... பெரும்பாலும் நம்பிக்கைச் சிரிப்புடன் மென்மையாகத்தான் இருந்தார்கள்.

மச்சானுக்கு வாழ்க்கைப் பட்டு, கோழி கூப்பிட எழுந்திருச்சு வந்து, பட்டறையில் சேத்து வெச்ச வெங்காயத்துக்கு நல்ல விலை வந்து விக்கலாம்ன்னு வந்தா.... ஒரு ரூவா தான் கூடிப்போயிருக்கு...! ஆனாலும் மச்சானோட இம்மாந்தொலைவு வந்துபுட்டோமல்ல...  என்று மனசிலே புன்னகையோட மச்சானைப் பார்த்து கிட்டே டீ குடிக்கிற இளமையான வெங்காயக்காரம்மா, ஒடிசலா, ஒய்யாரம நின்னுகிட்டு இருந்தாங்க.

இரண்டரை சைசில உருண்டு திரண்டு இருக்க, கால் டன் கணக்கிலே குண்டு உடம்பு பிதுங்க, லாவகமா அமர்ந்து வெங்காயத்தை அம்பாரமா குட்டு சேத்தாம.., 

நின்ன வாக்கில, அசமஞ்சமா, அத்தனை பெரிய உடம்பை வளைச்சு, குனிஞ்சு, வேலை செய்யிற நிலையைப் பார்த்தப்ப “பிரஷர்ஏறிடுமோன்னு பதைபதைப்பாய் இருந்தது.    

மற்றபடி எங்கும் ஜனங்கள்.... விதவிதமான உணர்வுகளுடன்.

கருப்பிலிருந்து..வெளுத்த மாநிறம்..,நிறைவாய் கட்டிய நூல் புடவை.., இயல்பான முகம்..,தம்மை யாரோ கவனிக்கிறார்கள் எனும் நினைப்பில் ஆடிவரும் நடையழகு.. ஒரு கையில் பைநிறைய சுமை.., அதனால் நடையில் ஆட்டம்.., வலமிருந்து இடம் செல்லும் வரை பார்த்து நின்றேன்.

ஒளிந்து கொண்டிருந்த புன்னகை மெல்ல பூத்தது.

நேற்றைய மலர்வின் நிறைவில், குறையாத பரவசத்தில் முன்செல்லும் மனைவியின் பின்னால், இருகைகளிலும் பைநிறையை காய்கறிகளுடன் கணவன்.

பரபரப்புடன் கணவன் தேர்ந்தெடுக்கும் எந்த காய்கறிகளையும் வேண்டாம் வேண்டாமென சொல்லி,
தன் தேடலின் காய்கறிகளை மட்டும் மனைவி எடுத்துக் கொடுக்க, அதை வாங்கி போட்ட கணவன் முகத்தில் கவனம் செலுத்தினேன்..... மீண்டும் புன்னகைப் பூக்கள் கண்சிமிட்டின.....!

பொண்டாட்டி சொன்னதெல்லாம் வாங்கிட்டேனே..!வேற ஏதாவது மறந்துட்டனோ..!ன்னு தனியே தன்னந்தனியே , சுவாசித்துக்கொண்டே யோசிக்கும் தனிக்கணவனின் மனைவியின் முகம் நிழலாக வந்து சென்றது. மகராசி என்ன பாடு படுத்தினாளோ..!

தன் உயர் அதிகாரிகளுக்கு சேவகம் செய்து பழக்கப்பட்ட கணவனின்  மனைவி, கணவனைவிட ஒரு புள்ளி உயரமாகவும்., கம்பீரமாகவும் நடக்க.,அதிகாரத்துக்கு அடிமைப்பட்ட கணவனின் கைகளில் இருபைகள்....உதிரியாக கை இடுக்கிலும் ஒன்று.

You pay…one rupee extra… you get…one rupee less…வட இந்திய வழி வந்த கணவன்மார்கள் ரூபாக் கணக்கு பார்த்துக்கொண்டே,கைக்கு அடக்கமான பைகளுடன் சந்தையில் , காசுக்கணக்குப் பற்றி தோழர்களுடன் பேசியவாரே உலா வந்தனர்.

அவர்கள் மேல் பார்வை பட்டுத்தவழ்ந்தது.

குதிரை வால் கொண்டையுடனும்.,வளைவுகளுடனும் .,
நிமிர்ந்த நடையுடனும் ,தெம்புடனும் நிறைவாய் 
வளைய வந்தனர்..,வடஇந்திய வழி வந்தப் பெண்கள். 


ஆனாலும் பாருங்க...வெளுத்துப்போன நிறத்தில்,நெற்றியிலே பொட்டும், கையிலே எந்த ஆபரணமும் இல்லாமல், பார்த்தவுடன் தாக்கும் வெறுமையில், வெண் சுடிதாரில்  வட இந்திய பெண்ணின் களை இழந்த முகத்தைப் பார்த்தபோது.....!
அவர் அருகில் அதே சாயலில்..... அப்படியே அவருடைய தாய்.... சற்றே வித்தியசமாய் நெற்றியில் கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு.

தேங்காய் எண்ணெய் தடவி, விரித்துபோட்ட சுருள் முடிக்கூந்தழில் முடிச்சும் போட்டு, வகிட்டின் துவக்கத்தில் குங்குமமும், சற்றேகீழ் நெற்றியில் ஒற்றை விரல் முத்திரையாய் சந்தனக்கீற்று இட்டு, உப்பென்று ஊதிய முகத்தில் நீண்ட மூக்கு , மூக்கின் நுனியில் எப்போதும் குருவாயுரப்பன் நர்த்தனம் ஆட, புன்னகைக்க தயாராயிருக்கும் முகத்தில்... தனித்துவமாக சற்றே முன் நீண்ட பற்கள்......., நாங்கள் கேரள தேசமாக்கும் எனும் பூச்சூடி., தமிழ்க்காய் கறிகளைத் தேடித்தேடி தேங்காய்களுடன் வாங்கி பை நிறைத்துச் சென்றனர்.

புன்னகைப்பூக்களில் இன்னும் பல மொட்டுக்கள் எனக்குள்ளே....!

எஜமானிஅம்மாள் கடைகடையாக காய்கறிகளை வாங்கி அடுக்க ,அதைச்சுமக்க பதிணைந்து பதிணாறு வயதில் வேலைக்காரப் பெண்ணும்,  தன்னுடன் அழைத்து வந்த பேத்தியை மகிழ்விக்க கைகளில் பணக்கட்டை வைத்துக்கொண்டு, நிற்க விரும்பாமல், ஆடியவாரே..,  அந்தக்காலை வேளையிலும் வாயில் பபுள்காமுடன்.., வயதானாலும் வயோதிகன் அல்ல எனும் வேடத்தில் ஒரு குடும்பம்...பேத்திக்கு புரியவில்லை...ஆனாலும் அழுகவில்லை...!
அவரவர் உலகத்தில் அவரவர்..!

பல மொட்டுக்களில் இன்னும் சில மொட்டுக்கள் மலரவில்லை.!
ஒற்றை வயோதிகர் தனக்குமட்டும் அல்லாமல்., கைப் பிடித்து அழைத்து வந்த., வயோதிகத்திலும் அன்பு பொழிந்து.,சினேகமாய்ப் புன்னகைக்கும் தன் மனைவிக்கும் சேர்த்து அளவாய் காய்கறிகள் வாங்கிச்சென்றார்.

இத்தனைக்கும் நடுவில் விரித்துப்போட்ட சுருள் முடியின் மீது தொப்பியும்.,சுடிதாரின்மேல் ஜீன்ஸ் ஜாக்கெட்டும்., பொட்டு வைக்காத முகத்தில் புன் சிரிப்புடன் தன் ஜீன்ஸ் கணவனை கை பிடித்து அழைத்துக்கொண்டு..... YOU  KNOW..…… YOU  KNOW என சப்தமிட்டுக்கொண்டே ., வித்தியாசமாக விற்ற வெங்காயத்தண்டை வாங்கிக்கொண்டு.,புஸு புஸு பொமரேனியன் நாய்க்குட்டிகள் கணக்காக., கர்ம சிரத்தையாக இங்கும் அங்கும் அலைந்து கொண்டு இருந்தார்கள்.

ஒருவேளை சாப்ட்வேர் தொழிற்சாலையின் ரோபோட்டுக்களாக இருக்குமோ என நினைத்தவுடன்
இன்னும் சில புன்னகை மொட்டுகள் மலர்ந்தன.


காற்றின் சருகுகளாய்... எநத மரத்தின் இலைகளோ தெரியவில்லை..!
அதிகாலை வேளையில் வேலைக்கு வந்த கார் ஓட்டுநர்கள், தத்தம் குடும்பங்களை மறந்து, வேலை பார்க்கும் குடும்பத்திற்காக , கொடுத்தனுப்பிய பட்டியல் பிரகாரம், காய்கறிகள் வாங்கிச்செல்லும் ஆண்களின் முகத்தில் புன்னகை தொலைந்திருந்த்து.


நீ பாதி.. நான் பாதி என்றில்லாமல்..“என்னிடம் கொடு.,நான் பிடித்துக்கொள்கிறேன்... இல்ல.. இல்ல நானே தூக்கி வருகிறேன்..”   “இதை இப்படி வச்சுக்கோ.. இன்னும் ஏதாவது வேணுமா.. வாங்கனுமா....அடுத்தமுறை வரும்போது இன்னொரு பை சேர்த்து எடுத்துட்டு வரலாம்..சவுகரியமா இருக்கும்...

புரிந்து கொள்ளலில்...இப்படி ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ளும் என் மனைவி., ஜனக்கூட்டத்தின் நடுவிலிருந்து எனை நோக்கி வரும் பொழுது., அவர் முகத்தில் நிறைந்திருந்தது...........நிறைவு.

அருகில் வந்தபோது....என்னுள்மலர்ந்த புன்னகைப்பூக்களை
பூங்கொத்தாக கொடுத்துச் சொன்னேன்.........,

ப்ரியமே...!
இத்தனை பேர்களுக்கு நடுவிலும்..,
இத்தனைவருடங்களுக்கு பிறகும்.,
உன் மனதின் அழகு இளமையாக....
உன் முகத்தை அலங்கரிக்க
உன்னதமாகவே  இருக்கிறாய்....

என்று நான் சொல்ல...
இருவரும் வாய் விட்டுச்  சிரித்தோம்.


என் இரு சக்கர வாகனத்தில்.,எப்போதும் என் தோள் பிடித்து அமர்ந்து வரும் என் மனைவி..,
உழவர் சந்தையிலிருந்து வீடு திரும்பிய அன்று...
என் இடுப்பை அனைத்தவாறு என்மீது காதலுடன் சாய்ந்து அமர்ந்து வந்தார்.

என்னுள்பூத்த புன்னகைப்பூக்கள்
மலர்ந்த மலர்களாக
சரம் தொடுத்து
கழுத்தில் விழுந்தது
மாலையாக......................!










Friday, July 13, 2012

உன் கண்ணில் நீர் வழிந்தால்....................!







உன் கண்ணில் நீர் வழிந்தால்....................!


              விரிவும்  ஆழமும்  கூடிய  உறவுகளின்  உணர்வுகள்  அருகிப்போன
              இந்தக் காலத்தில் ...,1970 தில் .,  வியட் நாம்  வீட்டில்  உயிர்
              ஓவியமாய்  மலர்ந்த   பிரெஸ்டீஜ் பத்மனாபன்  தம்பதியரின்  
              பாடல்  காட்சிகளை  இன்று  தொலைக்காட்சி
              பெட்டியின்வாயிலாகக்  கண்டேன்.
              


               வாழ்வின்  வசதிகளுக்காக  பொருளைத்  தேடி  ஓடும் இன்றையை
               காலகட்டத்தில்  நாம் தொலைத்ததுதான்  எத்தனை  எத்தனை .      
                      
              
               எல்லை  இல்லாத  புரிதலையும்..., ஏற்றுக்கொள்ளுதலையும்
              அன்புசெலுத்துதலையும் தொலைத்த  தருணங்கள்  எவை .
              

               ”உன்னைக்  கரம்  பிடித்தேன்  வாழ்க்கை  ஒளிமயமானதடி” 
                சிறப்புக்கு  சிறப்புச்செய்யும்  உன்னதமான நிலை.


                ஒட்டுமொத்த  சரணாகதித்  தத்துவத்தில்  யார்  உயர்ந்தவர்கள்., 
                யார்  தாழ்ந்தவர்கள். புரிந்துகொண்ட  ஈசன்., உமையவளுக்கு., 
                தன்  இடப்பாகத்தைக்  கொடுத்து  அர்த்தநாரீஸ்வர
                தத்துவததில் உதாரண  புருஷனாக  இருக்கிறார். 
                     
                               

                ஆலம்விழுதுகள்  போல்   உறவு  ஆயிரம்   வந்துமென்ன
             வேரென  நீயிருந்தாய்  அதில்  நான்
     
             வீழ்ந்துவிடாதிருந்தேன்......          


                 தாய்க்குபின்  தாரமாய்  வந்து  ஆணிவேராய்  நிலைநின்று
                அரவணைத்துச்  செல்லும்
                அந்த  உன்னதம்  எங்கே...............?





                 "என்  தேவையை  யார்  அறிவார்
                 உன்னைப்  போல்  தெய்வம்  ஒன்றே  அறியும்...."



                 இறையருளின்  உன்னதத்துடன்  ஒப்பிட்டு  நோக்கும்  காதல்
                காணாமல்   போனது எங்ஙனம்.....?

                   













Thursday, July 5, 2012

நினைவலைகளில் கோவை திரையரங்குகள்



கதம்பம் - 2.....

நினைவலைகளில்  கோவை  திரையரங்குகள்


பொய்த்துப்  போன  தென்மேற்குப்  பருவ  மழை....ஆனாலும்  இதமான   பருவ   நிலை.  முழுமையாக  காலை  நேரத்து பரபரப்புக்கு  ஆளாகிக்  கொண்ட   கோவை  மாநகரின் மேட்டுப்பாளையம்  சாலையில்  உள்ள  அன்னபூர்ணா உணவகத்தில் காபி சாப்பிட்டு  விட்டு   நானும்  நண்பர்  திரு.அமரநாதன்  அவர்களும்  சிரித்து  பேசிக்கொண்டிருந்தோம். 

Inline image 1       Darsana Film Society Coimbatore 1979-1981  Mr. AMARANATHAN.

        தன்னுள்  மறைத்து  வைத்திருக்கும்  சந்தோஷத்தை  இன்னும்  கொஞ்சம்  கூட  புகைப்படத்தில்  காட்டியிருக்கலாம்

  

திரு.அமரநாதனின்  நிழற்பட  கனவுகளின்  பழம்  நினைவுகளைப்  பற்றி  இன்றைய தினம்  ஜூலை 4, 2012  ஹிந்து நாளிதழின் மெட்ரோ ப்ளஸில்  முகப்பு  கட்டுரை  வந்திருந்தது  இன்று  உச்சரிக்க  மறந்துவிட்ட  அன்றைய  வெரைடிஹால்  தியேட்டரின்  முகப்பு  படமும்., இன்றைய பெயர் டிலைட் தியேட்டர்....  பசுமைபோர்த்திய  நகர்மன்றத்தின்  அருகே   உள்ள  மணிக்கூண்டின்  பழைய  புகைப்படமும்  பிரசுரிக்கப்  பட்டிருந்தன. 

Inline image 2      Thanksungo.........  Hindu Metro Plus 04-07-2012

Click here


தென் இந்தியாவில் முதல் திரையரங்காக  வெரைட்டிஹாலைக் கொண்டு  வந்த  சாமிக்கண்ணு வின்சென்ட  அவர்களை இந்த  நேரத்தில் நினைவு கூற  வேண்டும்


வெரைட்டிஹால்  தியேட்டரின்  முகப்பு  அலங்காரமும்.,  சிலைகளும்.,  பொங்கி  வழியும்  நீரூற்றும்.,  நந்தவனத்தில்  மலர்ந்திருந்த  பூச்செடிகளும்.,  என்  நினைவுகளில் நிழலாடின...  என்  குழந்தைப்  பருவத்தில்  அத்திரையரங்கத்தில்  ஹரிச்சந்திரா  திரைப்படத்தைக்  காணச்  சென்ற  போது  நீண்ட  நெடிய  வசனப்  பாடல்களுக்கு  நடுவே  ஒலித்த  என்  அழுகைக்  குரல்  இன்னும்  என்  காதில்  ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.

அந்தத்  திரைப்படத்தை  பார்த்துக் கொண்டிருந்த  பொழுது  சிறுவனாக இருந்த  நான்  இருக்கையை  விட்டு  அடுத்த  இருக்கைக்கு  தாண்டிய  பொழுது.,  கீழே  விழுந்து  இருக்கையின்  குறுக்குச்  சட்டத்தில்  பட்டு வெட்டுக்  காயம்  ஏற்ப்பட்டது  அதன்  தழும்பு  இன்னும்  என்  வலது  கண்  அருகே......... 

தன்  கட்டுரையில் திரு.அமரநாதன்  குறிப்பிட்டிருந்த அந்த  ஹிந்தி  திரைப்படம்  ”கேல்  கேல்  மெய்ன்”  அந்த  அழகு  தேவதை நீட்டுசிங்கின்  லட்டு மாதிரியான  உருண்டை  முகத்தில்  திராட்சை  கண்கள்., சிரிக்கும்  போது  குழிவிழும்  கன்னங்கள்., மற்றும்  நீண்ட  கூந்தலுடன்   ரிஷிகபூருடன்  குதித்து  விளையாடும் நடனம் .,   இனிமை  தெவிட்டாத  திரை  இசைப் பாடல்கள்....  இன்று  நினைத்தாலும்  நினைவலைகளில்  இளமை  பொங்குகிறது......

ஒரு  வருடத்திற்க்கு  மேலே  ஓடிய  ”ஷோலே” படமும்  அந்த  வெரைட்டிஹால்  தியேட்டரில்தான்.

திரு.அமரநாதன்  குறிப்பிட்டுள்ள  ரெய்ன்போ  தியேட்டர்., அந்தக்  காலத்து கோவை மாநகர  மக்களின்  மனதில்  வானவில்லின் வண்ண  ஓவியமாய்  பதிந்திருக்கும்  மற்றும்  ஒரு  திரையரங்கு.   எண்ணற்ற  ஆங்கில  படங்கள்.,  அதில்  என்  குழந்தை  பருவத்தின்  நினைவுகளில்  பதிந்திருக்கும்  முக்கிய  திரைப்படம்  ”ஹட்டாரி” 

அந்த  வானவில்  தியேட்டர்  கலையும்போது  கடைசியாகத்  திரையிட்ட  படம்  ”தி ப்ளாக் ப்யூட்டி”........  ஒரு  கவிதை.

மாற்றங்களினால்  கலைந்து  காணாமல்  போன  பல திரையரங்குகளில்  குறிப்பிடத்  தக்கவை..., மலையாளத்திலும்  ஆங்கிலத்திலும்  தொடர்ந்து  திரைப்படங்களை  திரையிட்ட   ஸ்ரீநிவாஸ்  தியேட்டர்., திரை அரங்கை ஒட்டியே ரயில் பாதை., அதனால்  இடை  இடையே  திரையரங்கத்தினுள்  தடதடக்க  ரயில்  வண்டி  ஓடும்  சப்தம்....

லைட் ஹவுஸ்  என்று  அழைக்கப் பட்ட  கென்னடி தியேட்டர்., உருகி உருகி  தன்னில்  மலர்ந்த  உணர்வை  வெளிக்  கொட்டும்  பாடல்  ஒன்று ., கை  கூடி  வந்த  காதலில்  சந்தோஷப்   பாடல்  ஒன்று.,  குரும்பும்  காதலும் கொட்டிய   திரைப்பாடல்  ஒன்று., ஊடலில்  அடிப்பட்டு  பாடப் பட்ட ”கவாலி”  சோகப்  பாடல்  ஒன்று., காதலியின்  குடும்பத்தில்  கிடைத்த  பாச மயமான  கூட்டுப்  பாடல்  ஒன்று.,  இத்தனை  உன்னதங்களும்  கலந்த ., டிம்பிள் கபாடியாவுடன்  ரிஷிகபூர்  நடித்தா  “ பாபி”  திரைப்படம்  தீபாவளிக்கு  திரையிடப்  பட்டது  கென்னடி தியேட்டரில் தான்...

டைமண்ட்  டாக்கீஸ்......  என்று  அழைக்கப் பட்ட   முருகன்  தியேட்டர் .,  ஐந்து  முறைக்கு  மேல்  நான்  கண்டு  களித்த எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்த  ”ஒளி விளக்கு”  திரையிடப் பட்டது....தைரியமாகச்  சொல் நீ மனிதன் தானா என்ற பாடலின் நடுவே ஒரே  காட்சி அமைப்பில் ஐந்து வெவ்வேறு சிகை., மற்றும்  உடை அலங்காரத்தில்  வந்து அசத்துவார்.

இதே முருகன்  தியேட்டரில்., எம்.ஜி.ஆர்  சரோஜாதேவி  நடித்த
“பெற்றால் தான்  பிள்ளையா”  திரைப்படத்தில்  பறக்கும் காரில் ஏறி சென்னை நகரைச் சுற்றி சக்கரக் கட்டி ராஜாத்தி என்று  டூயட் பாடுவார்

தெலுங்கு  C.I.D.,  மொழிமாற்றம்  செய்யப்பட்ட  படங்களை  காலைக்  காட்சியாக  ஓட்டிப்  புகழ்  பெற்ற  ”சுவாமி  தியேட்டர்” .  உலகத்தையே  சுற்றி  வந்த  வாலிபனைத்  திரையிட்ட  ”ராஜா தியேட்டரும்”  எங்கள்  நினைவுகளில்  வந்து  சென்றது....  “ நெஞ்சம் மறப்பதில்லை”  திரைப்படத்தில்  வில்லத்  தன  ஒப்பனையில்  பயமுறுத்திய  எம்.என்.நம்பியார்  அடுத்ததாக  எங்களை அதிரடித்து  பயமுறுத்தியது  ”உலகம்  சுற்றும்  வாலிபன்”  திரைப்படத்தில்  ஜப்பானிய  புத்த விகாரத்தில்  தோன்றும் போதுதான் .

சென்ட்ரல்”  திரையரங்கில்  திரையிடப் பட்ட  பற்பல  பிரமிக்கத்  தக்க   Where Eagles Dare., Guns of Navarone., Mackenna's Gold., Good Bad Ugly., போன்ற  ஆங்கில  படங்களின்  நடுவே  நான்  ஆனையிட்டால்  அது நடந்து விட்டால்  என்று  பாட்டு பாடி.,  அவ்வளவு  பெரிய  உடம்பை  ”ட்விஸ்ட் டான்ஸ்”.,  ஆடி  நடித்த  எம்.ஜி.ஆர்  படமான  ”எங்க வீட்டுப்  பிள்ளை”யில்  அந்த  பாட்டின்  நடுவே  பிரமாண்ட  படிக்கட்டுகளின்  மிக  அருகிலிருந்து  எடுக்கப்பட்ட  கோணத்தில் closeup shot.  எம்.ஜி.ஆரின்  தனித்துவம்  தெரியும்  சுவாரசியமான  எங்கள்  பேச்சில்  இதையும்  பகிர்ந்து கொண்டோம். 

1979 ல்  கவுளிபிரெளன்  சாலையில்  நகரத்தார்  சங்கத்தின்  முதல் மாடியில்  சத்தியஜித்ரேவின்  ”ஜல்சாகர்”  திரைப்படம்  ஒரு மார்கழிமாத  குளிர்க் காலத்தில்  16 எம் எம்  திரையில்  திரையிடப்  பட்டது . 

வாழ்ந்து....  தாழ்ந்து  போன  ஜமீந்தார்  வாயில்  திண்ணையில் கோலோச்ச எவரும்  இன்றி  தானம்  செய்ய  எதுவும்  இல்லாமல்  வெற்றுப்  பார்வையில்  அமர்ந்திருக்க.., தூரத்து  கானலில்  பட்டத்து  யானை  அசைந்தாடி  வருவதை  நினைவிலும்.,   நினைவில் இல்லாமலும்  உணர்ந்தவாரு  ஒரு  காட்சி அமைப்பு  இன்றும்  என் நினைவில்  நின்றதை  திரு.அமரநாதனிடம்  பகிர்ந்துகொண்டேன் 

புன்னகைத்தவாரே  கூறினார்  அன்று  அந்த  திரைப்படத்தை  திரையிட்டதே  எங்கள்  ”தர்சனா”  திரைப்பட சங்கம்தான்...

காலை நேரத்து கடமைகள் எங்களை அழைத்தது.... 

சிரித்தவாறே  சந்தோஷத்துடன்  கைகுலுக்கி  விடை பெற்றோம்......



நாங்கள்  பருகிய  அன்னபூர்ணாவின்  காபியின்  சுவை  நுனிநாக்கு  வரை  நின்றிருந்தது.... எங்கள்  நினைவுகள்  போல

என்ன .................   காபி  இன்னும்  கொஞ்சம்  கூட  சூடாக  இருந்திருக்கலாம்.