Thursday, May 17, 2012

கடவுளின் சொந்த தேசம்.........



நவம்பர்2011 க்குப்பிறகு., ஆறு மாதங்கள் கழித்து., மீண்டும் மாநில எல்லையைக் கடந்து பாலக்காடு மாவட்டம் எலப்புள்ளி அருகே பாறா சிவன் கோவில் திருமணமண்டபத்திற்க்கு., என் தோழியின் ப்ரியமான தங்கை திருமணத்திற்க்காகச் சென்றேன்.

அதிகாலையின் மிதமான மேகக்கூட்டங்கள் தவழ்ந்த மேற்குத்தொடர்ச்சி மலையின் அருகாமையிலேயே தேசிய நெடுஞ்சாலைப் பயணம். காலைநேரத்துப் பயணத்தில்.,மலை முகட்டை மேகங்களோ., மேகக்கூட்டங்களை மலை முகடுகளோ முத்தமிட்டு தழுவித் தவழும் கண்நிறைந்தகாட்சிகள் எப்பொழுதுமே காணக்கிடைக்கும். உயர்ந்த மலைஉச்சிகளைப் பார்க்கும் பொழுது எல்லாம்,சிகரங்களை வெற்றி கொள்ள வேண்டும் எனும்., உள் அடங்காத ஆங்காரம் என்னுள் மீண்டும் கண் சிமிட்டியது.

காலை வேளையிலும் அடர்த்திமிகு போக்குவரத்து., தேசிய நெடுஞ்சாலை எங்கும். சீரானவேகத்தில் நிறை மாதக்கர்ப்பிணியாய் கனரகவாகனங்கள் விதவிதமாய்ச் செல்ல.,அரசாங்கப் பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் தனியார்வாகனங்களும் அசுர வேகத்தில் ஒன்றை ஒன்று முந்திச்செல்ல.,இடையில் கிடைத்த சந்துகளில் புகுந்து சீறும் இரு சக்கர வாகனங்களின் வேகம் அட்ரினலைச் சுரக்கச் செய்கிறது.

ஒட்டி ஒட்டி உறவாடினாலும்., நாங்கள் வேறு எனும் உணர்வை வாளையார் பாலம் தாண்டிய உடனேயே சில் வண்டின் கூக்குரலாய்.,உரத்த குரலில் நம்மை வரவேற்கிறது கேரளதேசம். கடவுளின் சொந்ததேசம்........!

காற்றில் வெக்கையின் தாக்கம் காலை நேரத்திலேயே பரவ ஆரம்பித்துவிட்டது. சென்றவாரத்தில் பெய்த மழையின் தாக்கம்... எங்கும் பசுமை துளிர் விட்டுக் கொண்டு இருந்தது.
நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் உபயோகப்படுத்தப்படாமல்., வீணடிக்கப்பட்ட ,தொழிற்சாலைக்கட்டிடங்கள் ஒலமிட்டன. மரக்கிளைகளில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த உழைப்பாளர்களின் மேலிருந்த சிவப்புக்கம்யூனிசம் பேய்க் குரலில் சிரித்துக்கொண்டிருந்தது; காதைப் பொத்திக்கொண்டேன்…கடவுளின்  சொந்ததேசம்......!

பேருந்து நிலையத்திலும் .,பேருந்திலும்., செல்லும் வழியெங்கும்., பேருந்து நிற்கும் ஒவ்வொரு நிறுத்தத்திலும் கவனித்துப் பார்த்துக் கொண்டே....... சென்றேன்....... ம்..ஹும்....ஒன்று கூட தேறவில்லை.. முண்டாசுக்கவிஞன்., மீசை முருக்கி சொல்லிச்சென்ற
”சேரநன்னாட்டிளம் பெண்கள்எல்லாம்  நாடு கடந்து சென்று விட்டார்களோ...! 

ஒரு செய்தி...! தேசமெங்கும் உள்ள செவிலியர்களில் 63 சதம் சேரநன்னாட்டிளம் பெண்களாம்;

வரண்ட பூமியாய் ..... கடவுளின் சொந்த தேசம்.

கேரளதேசமெங்கும் தேசிய நெடுஞ்சாலைகளையும்.,மாநில நெடுஞ்சாலைகளையும் ஒட்டியே பெரும்பாலான ஊர்கள் இருக்கின்றன. உள்ளடங்கிய கிராமங்கள் அகலம் குறைந்த சிறு சாலைகளால் தொடுக்கப் பட்டிருக்கின்றன.எங்கும் எல்லாமும் கிடைப்பதான நுகர்வோர் கலாச்சார அறிகுறிகள் பறை சாற்றிக்கொண்டு இருக்கின்றன...விளம்பரப் பலகைகளாக.. இன்னமும் சரக்கு விற்பனையிலும்.,நுகர்வதிலும் முன்னனியில்
இருக்கும் தேசம்........... கடவுளின் சொந்த தேசம்.

பாலக்காட்டுக்கு சற்றே முன்பாக  கூட்டுப்பாதை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி., சாலையைத்தாண்டி தெற்கே போகும் பேருந்து நிறுத்தத்தில் நின்றால்.,உடனடியாக வந்ததய்யா... உச்ச கட்ட உற்சாக சப்தத்தில் மினிபஸ்”.

என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் யாரடி......

குடகு மலை காற்றில் ஒரு பாட்டு கேட்டதா.......

வெள்ளி கொழுசு மணி., மேலான கண்ணுமணி...

போன்ற எஸ்.பி. பாலசுப்பிரமணியதின் சிரிக்கும் குரலிலும்., மனோ,சித்ரா,சொர்ணலதா குரல்களிலும்.,மற்றும் வைரமுத்துவின் பாடல்வரிகளிலும்.,
என்பதுகளில் பரினமளித்த இளையராஜாவின் இசையில் மலர்ந்த திரைப்பாடல்களின் அதீத இசை வெள்ளத்தில் ‘மினிபஸ்அழகாய் வந்து என்னை அள்ளிச்சென்றது.....................கடவுளின் சொந்த தேசம்

போகும் வழியெல்லாம் கிருஷ்ணன் கோயில்.,பகவதி கோயில்., சிவன் கோயில்.,மாரி அம்மன் கோயில் காவிக்கொடி ஏற்றி.,நடு நடுவே பச்சை வண்ணக்கொடி ஏற்றிய , விதானங்களுடன் கூடிய மசூதிகள்., இவற்றுக்கு நடுவே அங்கொன்றும் இங்கொன்றுமாக இயேசுக்கிறுஸ்த்துவின் வண்ணமிகு சர்ச்சுக்ள் பரவிக்கிடக்கின்றன.

கறுப்பு, வெள்ளை தவிர பிற வண்ணங்கள் அனைத்துமே., நிறமிகள்பற்றிய., விழி உணர்வுத்தன்மையின் வர்க்கப் பாகுபாடு தானே...!

ஆகா.., வண்ணங்களை  யார்தான் கொட்டிக்குடுத்தார்களோ.....தெரியவில்லை.,பச்சை நீலம் மஞ்சள் சிவப்பு என அடிக்க வறும் கெட்டியான வண்ணங்களில்..,இருக்கைகள் நிறைந்த பாறா சிவன் கோவில் கல்யாணமண்டபத்தை அடைந்தேன்.
ரசனையின் உச்சத்தில் வண்ணமிகு தேசம்...... கடவுளின் சொந்த தேசம்.!

முகம் பார்க்கும் முகக்கண்ணாடியாய் மேற்கு நோக்கி சரியும் பாறை, பாறையின் மேலேறும் சிறு வழித்தடம், அடர்த்தியாயும்,அடர்த்தி இல்லாமலும் வண்ண வண்ண வீடுகள், நடுநடுவே அரேபியதேசத்தின் உப்புக்காசுகள் வந்து சேராததால்,மக்கிப்போன நெற்கதிர்களால் வேயப்பட்டதாழ்ந்த குடிசைகள் நிறைந்த ஊர் பாறா.

கிராமங்களின் முழு அடையாளங்களுடன் நகரங்களின் மையத்தை நோக்கி தன்னை உறுமாற்றிக்கொண்டிருக்கும் ஊர் அது.பாசிபிடித்து பழம் பெருமை பேசும் தூர்வாரப்படாத குளக்கரையில் இன்னமும் முண்டுடுத்தி குளிக்கும் வயோதிகப் பெண்கள்., புதிதாய்ப்பிறந்த கல்லுக்குழித் தண்ணீரில் துணிச்சலாய் முங்கி எழும் இளம் பெண்கள்.,

திரைப்படம் ஒட்டிப் பொழிந்து போய் மூடப்பட்ட ஒற்றைத் திறை அரங்கு., இன்னமும் உயிரை இழுத்து., இயங்கிக்கொண்டு இருக்கும் மற்றுமொறு திரை அரங்கு.,
வேட்டியை உதறிவிட்டு டைட்ஜீன்சுக்கும்., முன்பொத்தான்கள் போடப்படாமல், காலர் தூக்கிவிட்ட கட்டம் போட்ட சொக்காயுடன்....

இன்குலாப் சிந்தாபாத் கோஷமா.....,

சேவாதளத்தொண்டா....,

காவிக்கொடியா..., 

பச்சைக்கொடியா...... என்று யோசிப்பதற்குள்,

பேருந்துலிருந்து புன்னகைத்த நீலக்கலர்  சுடிதாரைப் பார்த்தவுடன்.
கடந்துசெல்லும் பேருந்தினுள் ஓடிச்சென்று தொற்றிக்கொண்டான்.....
கடவுளின் சொந்த தேசத்து இளைஞன்

ஊருக்கு ஒறு சிறு தொழில்...பாறையில் அப்பளம் இடுதல்.இட்ட அப்பளத்தை கொட்டிக்கிடக்கும் வெய்யிலில் இட்டு எடுத்தாலும் .. அது சுடாத அப்பளம்.

திருமணம்.........கடவுளின் சொந்ததேசத்தின் பாரம்பரியம்.. தென்னம்பூக்கள் சொருகப்பட்ட நெற்குவியல்., ஒற்றைத்தீபமேற்றிய குருவாயூர் குத்துவிளக்கு.,கலர்திரைச்சீலைகளின் அணிவகுப்பு.., வேர்த்துக்கொட்டும் கூடாரத்துக்குள் புளித்த ஜனங்கள்.,ஜொலிக்கும் ஆபரணங்கள்.,இருபால் இளவட்டங்களின் ஆட்டம்., நிமிர்ந்த, தலைகுனியாத மணமக்கள்.,

சரம் சரமாய் மல்லிகைப்பூக்கள் தொங்க., உடலெங்கும் வேர்த்துக்கொட்டும் கசகசப்பு.,காமிராவும் கையுமகப் பிறந்தவர்கள்போல், கைபேசிக் காமிராக் கண்களுடன் அடர்த்தியான தூண்கள் போல் திருமணமேடையை முற்றிலுமாக மறைத்துக்கொண்ட பட்டாளங்கள்..

காலக்கணக்கின்றி கடைசி நிமிடத்தில் நிற்பது கண்டேன்,திருமணம் முடிந்தது கண்டேன். 
சர்க்கஸ் கூடாரத்தின் டிரம் மாஸ்டரின் இசை முழக்கத்தில். வெள்ளாடு ஒன்றை மணமகன் வீட்டார் தள்ளிச் சென்று விட்டதை உணர்ந்து... உண்ணாமல் ..உறங்காமல் .......கடவுளின் சொந்த தேசம் கடந்து வந்து விட்டேன்.

வீசும் காற்று.,சுவைக்கும் தண்ணீர்., கேட்கும் மொழி....
இவை எல்லாவற்றுக்கும் மேல் அன்னபூர்ணாவின் கசக்கும் காபி...
புன்னகைத்தேன். 

வாழ்க கடவுளின் சொந்த தேசம்.





















No comments:

Post a Comment