Tuesday, July 17, 2012

ஜனங்கள்.......... உழவர் சந்தை..........


கதம்பம் 3 ..........


சுக்கிட்டிக் கீரையும், தண்டுக் கீரையும், பருப்புக் கீரையும்,
உயர் ரகம்நாட்டு ரகம் என்று 
கொத்துமல்லித்தலையும்,  எண்ணெய் பளபளப்பில் கருவேப்பிலையும்,
கொத்து கொத்தாய் சுவை  
மணக்கும் ......புதினா....... இலை வகைகள்   ஒரு  புறம்.





 நாட்டுக் காய்கறிகள்  எனும் தலைப்பில்.........கத்திரிக்காய், வெண்டைக்காய், பீர்க்கங்காய், வாழைக்காய்,
பூசனிக்காய், அரசானிக்காய், முருங்கைக்காய்....என காய்கறி வகைகள் ஒரு புறம்.






தண்டும், முருங்கக்கீரையும், தேங்காயும்.... தனி ஆவர்த்தனமாய், தனியே ஒரு புறம்.




தமிழருக்கு தனி முகம்.. அதுவும் மலைவாழ் தமிழருக்கு தனித்தமிழ் சாம்பல் பூத்து வெளுத்த முகம்...... 
கறுப்பும் வெளுப்பும் என எந்த நிறமானாலும்..........

 
கோசும் ,காலி ப்ளவரும் 
வாசம் வீச.. 

குண்டு குண்டு 
உருளைக்கிழங்கு.. 

தூத்துக்குடிமாவட்டம் 
எட்டையபுரம் தாலுக்கா..,
உருளைக்குடி கிராமத்து ஜனங்களுக்கு , நீலகிரி மலையில் விளைந்த குண்டு குண்டு உருளைக்கிழங்கு எட்டியிருக்குமா..? எனும் சந்தேகம் எனக்குள் புன்னகைத்தது.
ஆமாம்... உருளைக்குடி என்ற பெயர் எப்படி வந்தது...? காரணப்பெயரா...இடுபெயரா....? என்னும் கேள்வியுடன்
திரும்பினால் என்னைக் கவனி என்று பச்சைநிறம் கண்சிமிட்டியது.



 

கொட்டிக் குவிந்து கிடந்தன பீன்ஸும் பட்டாணியும்.

கடித்துச் சுவைத்திட கேரட்......,






 


அங்கும் இங்கும் எங்கும் சுத்தமான சிவப்பில் 
நாட்டுத்தக்காளியும்.., 
ஆப்பிள் தக்காளியும்..., 
அதுவும் இரண்டு ரூபாய் 
வித்தியாசத்தில்...



ஒரே ஒரு இடத்தில் கருணையோடு கருணைக்கிழங்கு.






சிறு குவியலாக பப்பாளிக் காய்களும் ,பழங்களும்..,
 
தாகசாந்தி செய்திட இளநீர்க் கடையும் இருந்தது.











குண்டு மிளகாயும்.., பச்சை மிளகாயும் எனைப் பார்க்க..,
நீட்ட மிளகாய் வருத்து எடுத்து விட்டது வரமிளகாயாக...
அதுவும் மிகுந்த காரத்துடன்.




நம்மூர் பக்கமிருந்து வந்த ,தெரிந்த முகமான கடைக்காரராக இருந்தால் , ஒரே கடையில் பை நிறம்பி சுமை ஏறி விடும்.


தேடித்தேடி, விரும்பி வாங்க வேண்டிய காய்கறிகளுக்காக அங்கும் இங்கும் ஆர்வத்தை சிந்தும் என் மனைவியைப் பார்த்தவாறே ஆங்காங்கே காத்திருந்தேன்.

காம்பை உடைச்சு வெண்டைக்காயைத் தேடாதே...! எனும் சப்தம் ஒரு புறம்....,ஒரு ரூபா கூட கம்மி இல்லை..என்று எறிந்துவிழும் சப்தம் ஒரு புறம்.., மொத்தம் ஒன்பது ரூபா.,
ஆனாலும் கூசாம பத்து ரூபான்னு கேட்பது ஒரு புறம்...!

கண்ணு...! தோட்டத்திலேயே முப்பது ரூபா கண்ணு...இங்க இருபத்துஎட்டு ரூபான்னு முடிவு செஞ்சுட்டாங்க.... என்ன கண்ணு பன்றது “ன்னு.. சிரிச்சுகிட்டே நஷ்டக்கணக்கு சொல்வதும்.., கேட்பதும்.. மற்றும் ஒரு புறம்.

இனிமையான குளிர் நிறைந்த காலை நேரம்..,வெயிலின்
சுரம் இன்னும் ஏறவில்லை. வெளிச்சம் மட்டும் இளம் தென்றலுடன் உடலை வருடியது .

கிராமத்து மனிதர்களே வியாபாரிகளாக மாறிப்போய், காசுபார்க்கும் கனாகாலத்தில், சற்றே எரிச்சல்... அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒலிக்க... பெரும்பாலும் நம்பிக்கைச் சிரிப்புடன் மென்மையாகத்தான் இருந்தார்கள்.

மச்சானுக்கு வாழ்க்கைப் பட்டு, கோழி கூப்பிட எழுந்திருச்சு வந்து, பட்டறையில் சேத்து வெச்ச வெங்காயத்துக்கு நல்ல விலை வந்து விக்கலாம்ன்னு வந்தா.... ஒரு ரூவா தான் கூடிப்போயிருக்கு...! ஆனாலும் மச்சானோட இம்மாந்தொலைவு வந்துபுட்டோமல்ல...  என்று மனசிலே புன்னகையோட மச்சானைப் பார்த்து கிட்டே டீ குடிக்கிற இளமையான வெங்காயக்காரம்மா, ஒடிசலா, ஒய்யாரம நின்னுகிட்டு இருந்தாங்க.

இரண்டரை சைசில உருண்டு திரண்டு இருக்க, கால் டன் கணக்கிலே குண்டு உடம்பு பிதுங்க, லாவகமா அமர்ந்து வெங்காயத்தை அம்பாரமா குட்டு சேத்தாம.., 

நின்ன வாக்கில, அசமஞ்சமா, அத்தனை பெரிய உடம்பை வளைச்சு, குனிஞ்சு, வேலை செய்யிற நிலையைப் பார்த்தப்ப “பிரஷர்ஏறிடுமோன்னு பதைபதைப்பாய் இருந்தது.    

மற்றபடி எங்கும் ஜனங்கள்.... விதவிதமான உணர்வுகளுடன்.

கருப்பிலிருந்து..வெளுத்த மாநிறம்..,நிறைவாய் கட்டிய நூல் புடவை.., இயல்பான முகம்..,தம்மை யாரோ கவனிக்கிறார்கள் எனும் நினைப்பில் ஆடிவரும் நடையழகு.. ஒரு கையில் பைநிறைய சுமை.., அதனால் நடையில் ஆட்டம்.., வலமிருந்து இடம் செல்லும் வரை பார்த்து நின்றேன்.

ஒளிந்து கொண்டிருந்த புன்னகை மெல்ல பூத்தது.

நேற்றைய மலர்வின் நிறைவில், குறையாத பரவசத்தில் முன்செல்லும் மனைவியின் பின்னால், இருகைகளிலும் பைநிறையை காய்கறிகளுடன் கணவன்.

பரபரப்புடன் கணவன் தேர்ந்தெடுக்கும் எந்த காய்கறிகளையும் வேண்டாம் வேண்டாமென சொல்லி,
தன் தேடலின் காய்கறிகளை மட்டும் மனைவி எடுத்துக் கொடுக்க, அதை வாங்கி போட்ட கணவன் முகத்தில் கவனம் செலுத்தினேன்..... மீண்டும் புன்னகைப் பூக்கள் கண்சிமிட்டின.....!

பொண்டாட்டி சொன்னதெல்லாம் வாங்கிட்டேனே..!வேற ஏதாவது மறந்துட்டனோ..!ன்னு தனியே தன்னந்தனியே , சுவாசித்துக்கொண்டே யோசிக்கும் தனிக்கணவனின் மனைவியின் முகம் நிழலாக வந்து சென்றது. மகராசி என்ன பாடு படுத்தினாளோ..!

தன் உயர் அதிகாரிகளுக்கு சேவகம் செய்து பழக்கப்பட்ட கணவனின்  மனைவி, கணவனைவிட ஒரு புள்ளி உயரமாகவும்., கம்பீரமாகவும் நடக்க.,அதிகாரத்துக்கு அடிமைப்பட்ட கணவனின் கைகளில் இருபைகள்....உதிரியாக கை இடுக்கிலும் ஒன்று.

You pay…one rupee extra… you get…one rupee less…வட இந்திய வழி வந்த கணவன்மார்கள் ரூபாக் கணக்கு பார்த்துக்கொண்டே,கைக்கு அடக்கமான பைகளுடன் சந்தையில் , காசுக்கணக்குப் பற்றி தோழர்களுடன் பேசியவாரே உலா வந்தனர்.

அவர்கள் மேல் பார்வை பட்டுத்தவழ்ந்தது.

குதிரை வால் கொண்டையுடனும்.,வளைவுகளுடனும் .,
நிமிர்ந்த நடையுடனும் ,தெம்புடனும் நிறைவாய் 
வளைய வந்தனர்..,வடஇந்திய வழி வந்தப் பெண்கள். 


ஆனாலும் பாருங்க...வெளுத்துப்போன நிறத்தில்,நெற்றியிலே பொட்டும், கையிலே எந்த ஆபரணமும் இல்லாமல், பார்த்தவுடன் தாக்கும் வெறுமையில், வெண் சுடிதாரில்  வட இந்திய பெண்ணின் களை இழந்த முகத்தைப் பார்த்தபோது.....!
அவர் அருகில் அதே சாயலில்..... அப்படியே அவருடைய தாய்.... சற்றே வித்தியசமாய் நெற்றியில் கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு.

தேங்காய் எண்ணெய் தடவி, விரித்துபோட்ட சுருள் முடிக்கூந்தழில் முடிச்சும் போட்டு, வகிட்டின் துவக்கத்தில் குங்குமமும், சற்றேகீழ் நெற்றியில் ஒற்றை விரல் முத்திரையாய் சந்தனக்கீற்று இட்டு, உப்பென்று ஊதிய முகத்தில் நீண்ட மூக்கு , மூக்கின் நுனியில் எப்போதும் குருவாயுரப்பன் நர்த்தனம் ஆட, புன்னகைக்க தயாராயிருக்கும் முகத்தில்... தனித்துவமாக சற்றே முன் நீண்ட பற்கள்......., நாங்கள் கேரள தேசமாக்கும் எனும் பூச்சூடி., தமிழ்க்காய் கறிகளைத் தேடித்தேடி தேங்காய்களுடன் வாங்கி பை நிறைத்துச் சென்றனர்.

புன்னகைப்பூக்களில் இன்னும் பல மொட்டுக்கள் எனக்குள்ளே....!

எஜமானிஅம்மாள் கடைகடையாக காய்கறிகளை வாங்கி அடுக்க ,அதைச்சுமக்க பதிணைந்து பதிணாறு வயதில் வேலைக்காரப் பெண்ணும்,  தன்னுடன் அழைத்து வந்த பேத்தியை மகிழ்விக்க கைகளில் பணக்கட்டை வைத்துக்கொண்டு, நிற்க விரும்பாமல், ஆடியவாரே..,  அந்தக்காலை வேளையிலும் வாயில் பபுள்காமுடன்.., வயதானாலும் வயோதிகன் அல்ல எனும் வேடத்தில் ஒரு குடும்பம்...பேத்திக்கு புரியவில்லை...ஆனாலும் அழுகவில்லை...!
அவரவர் உலகத்தில் அவரவர்..!

பல மொட்டுக்களில் இன்னும் சில மொட்டுக்கள் மலரவில்லை.!
ஒற்றை வயோதிகர் தனக்குமட்டும் அல்லாமல்., கைப் பிடித்து அழைத்து வந்த., வயோதிகத்திலும் அன்பு பொழிந்து.,சினேகமாய்ப் புன்னகைக்கும் தன் மனைவிக்கும் சேர்த்து அளவாய் காய்கறிகள் வாங்கிச்சென்றார்.

இத்தனைக்கும் நடுவில் விரித்துப்போட்ட சுருள் முடியின் மீது தொப்பியும்.,சுடிதாரின்மேல் ஜீன்ஸ் ஜாக்கெட்டும்., பொட்டு வைக்காத முகத்தில் புன் சிரிப்புடன் தன் ஜீன்ஸ் கணவனை கை பிடித்து அழைத்துக்கொண்டு..... YOU  KNOW..…… YOU  KNOW என சப்தமிட்டுக்கொண்டே ., வித்தியாசமாக விற்ற வெங்காயத்தண்டை வாங்கிக்கொண்டு.,புஸு புஸு பொமரேனியன் நாய்க்குட்டிகள் கணக்காக., கர்ம சிரத்தையாக இங்கும் அங்கும் அலைந்து கொண்டு இருந்தார்கள்.

ஒருவேளை சாப்ட்வேர் தொழிற்சாலையின் ரோபோட்டுக்களாக இருக்குமோ என நினைத்தவுடன்
இன்னும் சில புன்னகை மொட்டுகள் மலர்ந்தன.


காற்றின் சருகுகளாய்... எநத மரத்தின் இலைகளோ தெரியவில்லை..!
அதிகாலை வேளையில் வேலைக்கு வந்த கார் ஓட்டுநர்கள், தத்தம் குடும்பங்களை மறந்து, வேலை பார்க்கும் குடும்பத்திற்காக , கொடுத்தனுப்பிய பட்டியல் பிரகாரம், காய்கறிகள் வாங்கிச்செல்லும் ஆண்களின் முகத்தில் புன்னகை தொலைந்திருந்த்து.


நீ பாதி.. நான் பாதி என்றில்லாமல்..“என்னிடம் கொடு.,நான் பிடித்துக்கொள்கிறேன்... இல்ல.. இல்ல நானே தூக்கி வருகிறேன்..”   “இதை இப்படி வச்சுக்கோ.. இன்னும் ஏதாவது வேணுமா.. வாங்கனுமா....அடுத்தமுறை வரும்போது இன்னொரு பை சேர்த்து எடுத்துட்டு வரலாம்..சவுகரியமா இருக்கும்...

புரிந்து கொள்ளலில்...இப்படி ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ளும் என் மனைவி., ஜனக்கூட்டத்தின் நடுவிலிருந்து எனை நோக்கி வரும் பொழுது., அவர் முகத்தில் நிறைந்திருந்தது...........நிறைவு.

அருகில் வந்தபோது....என்னுள்மலர்ந்த புன்னகைப்பூக்களை
பூங்கொத்தாக கொடுத்துச் சொன்னேன்.........,

ப்ரியமே...!
இத்தனை பேர்களுக்கு நடுவிலும்..,
இத்தனைவருடங்களுக்கு பிறகும்.,
உன் மனதின் அழகு இளமையாக....
உன் முகத்தை அலங்கரிக்க
உன்னதமாகவே  இருக்கிறாய்....

என்று நான் சொல்ல...
இருவரும் வாய் விட்டுச்  சிரித்தோம்.


என் இரு சக்கர வாகனத்தில்.,எப்போதும் என் தோள் பிடித்து அமர்ந்து வரும் என் மனைவி..,
உழவர் சந்தையிலிருந்து வீடு திரும்பிய அன்று...
என் இடுப்பை அனைத்தவாறு என்மீது காதலுடன் சாய்ந்து அமர்ந்து வந்தார்.

என்னுள்பூத்த புன்னகைப்பூக்கள்
மலர்ந்த மலர்களாக
சரம் தொடுத்து
கழுத்தில் விழுந்தது
மாலையாக......................!










No comments:

Post a Comment