Tuesday, April 8, 2014

வழி விட்ட அய்யனார் கோயிலில்........கல் குதிரை....


.வழி விட்ட அய்யனார் கோயிலில்........கல் குதிரை.....





















இரட்டைக் குதிரையாய் பிறக்கப் போகிறது கோணங்கியின் “கல் குதிரை”


இராமநாதபுரம் மாவட்டம்..,

”தங்கக்கவசம்” சாற்றி துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சூழ்ந்த                        பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்.
நினைவிடத்தின் அடுத்துள்ள கமுதியில்..............
ஒரு பொட்டல் வெளிச் செம்மண் பூமியில்..,
வேப்பமர நிழலில்.....

உக்கிர வழி விட்ட அய்யனார் சந்நிதியில்
வெக்கையின் தீற்றல் இல்லாத மென் காற்று
 உள்ளத்தை மெல்லத் தழுவ......
காற்றெங்கும்... கறிச்சுவை வீச... ஜனங்கள் சுற்றிய சூழலில் ...
கூவி அழைக்கும் ஐஸ் பெட்டியும்..
கலர் கலரான பிளாஸ்டிக் வளையல்.,
ஒட்டிக்கொள்ளும் ஒட்டுப் பொட்டுகள்......


எத்தனை தேடியும்.....ஊதா...கலரு ரிப்பன்  மட்டுமல்ல
 எந்த ரிப்பனுமே இல்லாத கடைகளில் ....
 கலர் கலராக ரப்பர்பேண்டுகள் குவிந்திருக்க......
அதன் நடுவே...தலைக்கிளிப்புகள்...விதவிதமான வடிவங்களில்....!
ஓடாத இரயில் ., காற்றடைத்த ஏரோபிலேன்.,பறவை மற்றும்
ஒட்டகச் சிவிங்ஙி பொம்மைகள்........


பெருசும் இல்லாமல் சிறுசும் இல்லாமல்....,
சுத்துப்பட்டு கிராமங்களுக்கு போய்ச் சேரமுடியாத .,
 காண்டாமணியின் வெங்கலத்தாலான,
 மணியோசை எழுப்பாத சற்றே பெரிதான மணிகள் .,
கல்தூண்களின் இடையே நெருக்கியடித்து.,
வரிசைப்பட்டிருந்தது.....!


”எத்தனை தேடியும் சேமியா குச்சி ஐஸ் கிடைக்கவேஇல்லை.”

 ஆட்டங்கல்லில் தொடர்ந்து மசாலா அரை பட்டுக்கொண்டிருக்க.....
.குத்தவைத்து உட்கார்ந்து ஆட்டிக்கொண்டிருந்த முதிர்பருவப் பெண்ணுக்கும்., மசாலாவைத்தள்ளிக்கொடுத்துக் கொண்டு இருந்த இளம் பருவப்பெண்ணுக்கும் இடையே....
சந்தோஷம் வார்த்தைகளால் அரைபட்டுக்கொண்டே இருந்தது...,



 சொந்தங்களின் சுகமான தருணங்களில் ஒன்று ....


பேசிமுடித்துவிட்ட பெருசுகள்...,
பேசுவதற்கு ஒன்றுமில்லாததை ஏற்றுக்கொண்டு...
தொலை தூரப் பார்வைகளில் அளந்து கொண்டே இருந்தார்கள்.
 

 காலமுச்சூடும் பேசி்னாலும் மிச்சத்தை முடிஞ்சு வைத்திருக்கும் ......
பெருசுகளின் மனைவிகள்......
 தஞ்ஜோடி பெருசுகளுடன்., கூடிக்கூடி........
 விட்ட இடத்திலிருந்து பேசிக்கொண்டே இருந்தார்கள்.

மாவரசிகளும்.,அம்மன் சாமிகளும்.,சப்த கன்னியர்களும்., நாகதெய்வங்களும்.,பாயக் காத்திருக்கும் அய்யனாரின் குதிரை வாகனமும்....சூழ்ந்திருக்க., கர்ப்பக்கிரகத்தில்




















.,பூரணா...புஷ்கலா சமேதமாகவிழித்துப்பார்த்தவாரு அமர்ந்திருந்தார்........

குலம் காக்க வந்த காவல் தெய்வமான வழி விட்ட அய்யனார் சாமி.




மேலிருந்து வரும் சூரிய ஒளி வெளிச்சத்தில்
 கொட்டப்பட்ட பூமாலைகளுக்கு நடுவே..
உற்றுப்பார்த்த போது
 உக்கிரமான பார்வையோடு 
சாந்தமாக அமர்ந்திருந்தார்
 அய்யனார் சாமி.


 தம்மக்களை காபந்து செய்திட சகலநேரத்திலும் உக்கிரபார்வையோடு இருந்தாலும்..
 தன் நிழலில் தன்னை நாடி வருவோர்க்கு
 சாந்தமாக சந்தோஷங்களைக் கொட்டித்தரும் சாமியாக
 நிறைவாக அமர்ந்த்திருந்தார்.

பொங்கல் வைத்தோரும்.,
 மொட்டை அடித்தோரும்.,
 காது குத்தியோரும்....
குடும்பச் சொந்தங்கள் சூழ குடும்பம் குடும்பமாக....வர....
அய்யனார் சாமிக்கானசிறு தெய்வ வழிபாடு
தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருந்தது.


உச்சிப் பொழுதில் துவங்கிய ....கடாச் சோறு விருந்து....சுற்றுவட்டாரம் முழுக்கமணக்க... மணக்க...தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது

சமூகத்தில் தொடர்ந்து வரும் மாற்றங்கள் தெளிவாய்த் தெரிகின்றன.


முதற்கண் கல்வி அறிவு...

அரசாங்கப்பணியிலிருந்து பணி மூப்பு எய்திய.. பெருசுகளும்,
 பள்ளி ஆசிரியைப் பணியிலிருக்கும் முதிர் பெண்களும்,
தனியார் வேலை வாய்ப்பிலும் ,
 சொந்தத் தொழிலில் மூழ்கிய மக்கமார்களும்,
கழுத்திலும் ,காதிலும் தங்கம் பூட்டிய படித்தமருமக்கமார்களும்,
சந்தோஷங்களை கல்லூரிகளில் தேடியும்,பகிர்ந்தும் கொண்டிருக்கும் இளைஞர்களும்,இளைஞிகளும் சூழ்ந்திருக்கும் சூழலில்...


அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏழ்மை ....
பராக்குப்  பார்த்துக் கொண்டிருந்தது.

குறைவில்லாத தனி நபர் ஆண்டு வறுமானம், விதவிதமான கார்களிலும், வண்ண வண்ண சுற்றுலா பேருந்துகளிலும், வேன்களிலும் ....கட்டியம் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது.

............இவர்களுக்கு நடுவே இங்கிட்டும்,அங்கிட்டும்நகர்ந்து கொண்டு,
பிடி கிட்டாப் புள்ளியாக.....தோழர்களுடன் கலாய்த்துக் கொண்டு., உள்ளூர ஏதோபரபரப்பில்., நெற்றியில் திருநீறும்.,முகத்தில் தாடியும்., சீர்வாரப்படாத கலைந்த தலைமுடியுடனும்...பறந்து கொண்டு இருந்தார்...

”கல் குதிரையின் பிதாமகன்.......”


பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமத்தில்.,

 கொல்லனின் ஆறு பெண் மக்களுக்கு.,

 மதனிமார்கள் கதையை.,

இருள்வ மொளத்திகமாய் .,

 பாழி..எனக் கூவி ’த’ எனத் தந்த.,

பின் நவீனத்துவ கோட்பாடுகளில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு...

மாயாவாத எழுத்துக்களில்

 படைப்பிலக்கியத்தை பிரகனப்படுத்திக் கொண்டிருக்கும்.........
கோணங்கியின்......பரவசத்தை உணர்ந்தேன்.
இரட்டைக் குழந்தையை பிரசவிக்கப் போகும் நிறைமாத கர்ப்பிணியின்
அதீத உள்ளுணர்வின் வழித்தடத்தில் ., குதூகலித்திருந்தார்.

...............................கல் குதிரை......இளவேனிற்கால இதழ்........................
...............................கல் குதிரை......முதுவேனிற்கால இதழ்.......................


தன்னாட்சித் தலையங்கம்
கவிஞர்களின் பிரகடனங்கள்
கதையாளர்களின் ஆளுமை
உலகத்தின் வயம் வந்த அயல் தேசத்துக் கதைகளின் தமிழ் ஆக்கம்
பேசா மொழியில் பேசும் நேர் காணல் தாக்கீது
கட்டுரைகளின் கதைப்பு அலங்காரம்
நாவல்களிலிருந்து எடுத்தாளப்பட்டசிறப்புப் பகுதிகள்....
அங்கொன்றும்..இங்கொன்றுமாக புனை கதைகள்....
வண்ணத்தில் வெளி அட்டை உள் அட்டை ஓவியங்களும்....
இதழ் நெடுகச் சிதறிக் கிடக்கும் கோட்டோவியச் சித்திரங்கள் சூழ

கோணங்கி பிரசவிக்கப் போகும் இரட்டைச் சிறப்பிதழில் ஒன்று
கார்லோச் ஃபுயண்டஸ் நூற்றாண்டை நோக்கிய.......
 உலகச் சிறுகதைச்சிறப்பிதழாக சிறப்புப் பெறுகிறது.



ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ




கமுதி.....வழி விட்ட அய்யனார்...பெருமானே..! 
யாறுக்கய்யா வழி விட்டீங்க....!
 உங்ககிட்டே ஒரு கதை இருக்குமே அய்யா..!
 அதைச் சொல்லுங்கைய்யா...கேக்கறோம்.!
உங்க கதையில முதல் பூ பூத்தது பசுஞ்சோலையிலா....
 பாலை வனமாய்ப் போன பொட்டல் வெளியிலா....!
 சொல்லுங்க வழி விட்ட அய்யனார் பெருமானே...!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

No comments:

Post a Comment